பல்வேறு சிறப்புகளை கொண்ட அந்தக் கால கோவில்களைப் பற்றி பார்த்தோம். மேலே இருக்கும் இந்தப்படத்தைப் பார்த்தாலே இன்றைய கோவில்களின் நிலை பலருக்கும் புரியும். மிகப்பெரிய கோவில்களைப் பராமரிக்க இப்போது நம்மால் முடிவதில்லை. அதனால் நமக்கு ஏற்றவாறு கோவில்களை மாற்றிக் கொண்டோம்.
அந்த மாறுதல்களில் பழமையான விசயங்கள் அனைத்தையுமே நாம் மறந்து விட்டோம். கடவுள் இருக்கும் இடமாக மட்டும் அந்தக் காலத்தில் கோவில்கள் உருவாக்கப்படவில்லை. மக்களுக்கு வாழ்வாதரம் தரவும், பொழுது போக்கிற்கிற்காவும், நம்பிக்கை ஊட்டுவதற்காகவும் என அடுக்கிக் கொண்டே போகலாம். பழங்கால கோவில்களை பராமரிக்க இயலாமல் போனாலும், இந்த அடிப்படை விசயங்களையாவது நாம் பாதுகாத்து இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் நாம் தவறவிட்டுவிட்டோம்.
ஒரு சிறிய அறை. அந்த அறையில் ஏதேனும் ஒரு கடவுள் உருவம். இது தான் இன்றைய நவீன கோவில்கள். அதுவும் அந்தக் கோவில்களுக்கென தனியான நிலம் ஒதுக்கி கட்டுவதில்லை. சாலைகளில் மக்கள் நடப்பதற்கென உள்ள பாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படுகின்றது. மக்களுக்கு உதவுவதற்காக கட்டப்பட்டுகின்ற கோவில்களின் அடிப்படையே இங்கு சிதறிப் போய் காணப்படுகிறது.
பல ஆயிரம் மக்களுக்கு பயன்படுகின்ற இடமாக இருந்த கோவில்கள். இன்று மக்களின் போக்குவரத்திற்கு இடையூராக இருக்கின்றன. அடிப்படையான விசயமே பாதிக்கப்பட்டுவிட்டதால், கோவில்களில் வாழ்ந்த கலைகளும், அதனை நம்பி வந்த கலைஞர்களும் இன்று காணமல் போய்க் கொண்டிருக்கின்றார்கள்.
நீங்கள் தெருக் கோவில்களைப் பற்றி சொல்லுகிறீர்கள். பழம்பெருமை வாய்ந்த கோவில்கள் இன்றும் இயங்கிக் கொண்டுதானே இருக்கின்றன என்று எண்ணுகிறீர்களா?. அடுத்த இடுகை அந்தக் கோவில்களில் நடக்கும் கொடுமைகளைப் பற்றிதான்.
லேபிள்கள்: ஆன்மீகம், இந்து மதம், கோவில்கள், தாய் மதம்