இன்றைய கோவில்களின் நிலைமைதெருக் கோவில்களின் நிலையை சென்ற இடுகையில் பார்த்துவிட்டோம். இப்போது பெரிய கோவில்களின் இன்றைய நிலையை காண்போம்.

இன்று பெரிய கோவில்கள் ஒரு வணிக நிறுவனம். வாசலில் செருப்பை அவிழ்த்துப் போடுவதில் துவங்கி, ஒவ்வொரு பத்தடிக்கும் ஏதோ காரணம் சொல்லிப் பணம் கறக்கும் வித்தைக் கூட்டமே தெரிந்து வைத்திருக்கின்றது. அர்ச்சனை, அபிசேகம் என தொடங்கி, மாதம் முழுதும் செய்ய வருடம் முழுதும் செய்ய என பணம் பிடுங்குவதில் குறியாக இருக்கின்றது.

மக்களிடமிருந்து காசுகளை வாங்கிக் கொண்டு அவர்களையே வேலி வைத்துக் கொண்டு வரிசைப்படுத்துகின்றது. விழாக் காலங்களில் எறும்புகளைப் போல வரிசையாக கோவில் வாசலிலிருந்து கருவரை வரையும், பின்பு கருவரையிலிருந்து வாசல் வரையிலும் வேலியில் நகர்கின்றார்கள் மக்கள். தரிசனத்திற்கு முதல், இரண்டாம் வகுப்புக் கட்டணங்கள், சிபாரிக் கடிதங்கள், கையூட்டு, பல் இளிப்பு என நடைமுறைத் தந்திரங்களின் கூடாரமாகி விட்டது கோவில்.இப்போது பிரார்த்தனைகள் என்பவை வெறும் சடங்கு அவ்வளவுதான். எனவே தெய்வத்தை தவிர அங்கு கவணிப்பதற்கு ஏதுமில்லாமல் போய்விட்டது. கோவிலுக்கு செல்லும் ஒரு சதவீத மக்கள் கூட சிற்பங்களையோ, ஓவியங்களையோ, பிரகாரச் சுவர் முழுக்க செதுக்கியிருக்கும் கல்வெட்டுகளையோ பார்ப்பதேயில்லை. சில இடங்களில் ஒழுங்கு வேலி அமைக்க நல்ல கலைப் படைப்புகள் சிதைக்கப் பட்டிருக்கின்றன. மற்ற சில இடங்களிலோ பாதுகாப்பு என்று பெயரில் இரும்பு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றன.

பலரும் பார்க்க வேண்டுமென எண்ணி எண்ணி செதுக்கிய அந்தச் சிற்பிக்கும், உயிர் கொடுத்த வரைந்த ஓவியனுக்கும் செய்யும் நன்றி இது தானோ!. இது போதாதென சில வள்ளல்கள் செய்யும் கொடுமை அளவிடமுடியாது. எல்லா கோவில்களிலும் எரியும் டியூப் லைட்டிலிருந்து மின்சார மணி வரை உபயதாரர்களின் பெயர்கள் முழு முகவரியோடு, முடிந்தால் கைப்பேசி எண்களோடும் காணப்படுகின்றன. சில கோவில்களில் கருவரையில் இருக்கும் கடவுளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் உபயதாரர்களின் பெயர்களே இருக்கின்றன.

கலையும், மனிதர்களும் வாழ்ந்த இடமாக இருந்த கோவில்கள், இன்று பணம் பிடுங்கும் மிருகங்களாலும், எதைக் கொடுத்தாவது தங்கள் பிராத்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும் இரக்கமற்றவர்களாலும் நிரம்பிக் கிடக்கின்றது. இதையெல்லாம் பார்க்கும் போது கடவுள் கோவிலிருந்து வெளியேறி வேறு இடம் தேடிக் கொண்டிருக்கின்றானோ எனத் தொன்றுகிறது.

0 Comments:

Post a CommentBlogger Template by Blogcrowds